ரூ.18.43 கோடியில் உலக புகழ் வாய்ந்த கீழடி தொல்லியல் அருங்காட்சியகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Published Date: March 6, 2023

CATEGORY: CONSTITUENCY

தமிழக அரசால் ரூ. 18.43 கோடியில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கட்டப்பட்ட உலகப் புகழ்வாய்ந்த தொல்லியல் அருங்காட்சியகத்தை நேற்று  மாலை 6: 15 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இங்கு இரண்டு ஏக்கரில் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. 10 கட்டட தொகுதிகள் உள்ளன. வரவேற்பு அறை, 54 இருக்கைகளுடன் ஏ.சி வசதியுடன் மினி தியேட்டர், ஓய்வு அறை, பொருட்களை காட்சிப்படுத்த தனியாக ஆறு கட்டடத் தொகுதிகள் கட்டியுள்ளனர்.

அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள்களை மையப்படுத்தியே கட்டடத் தொகுதிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. வைகை நதி கரையோரம் நடந்த அகழாய்வு என்பதால் கடல்சார் வணிகர்கள் மூலம் சூது, பவளம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. அந்த கட்டட தொகுதிக்கு கடல் வழி வணிகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மண்பாண்ட பொருட்கள் பற்றிய கட்டட பகுதிக்கு கலர் செய் கோ என பெயர் வைத்துள்ளனர். வைகையும் நீரும், ஆடையும் அணிகலன்களும், வாழ்வும் வளமும், நிலமும் நீரும் என மொத்தம் ஆறு கட்டட தொகுதிகள் இரண்டு தளங்களுடன் கட்டியுள்ளனர். ஒவ்வொரு தளத்திலும் அந்தந்த பொருட்கள் தொடர்புடைய படைப்புச் சிற்பங்கள் அகழாய்வு குறித்த மினியேச்சர் சிற்பங்களும் செதுக்கியுள்ளனர்.

ஒவ்வொரு கட்டட தொகுதியிலும் எல்.இ.டி. டிவிகள் மூலம் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரங்களில் அகழாய்வு பணிகள் அதில் எடுக்கப்பட்ட பொருட்கள் பயன்பாடு, அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் பேச்சு ஆகியவை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் ஒளிபரப்ப பட உள்ளன.

மத்திய அரசின் முதலாம் கட்ட அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய தளங்களில் அகழாய்வு பணிகள் நடந்துள்ளன.

கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. கொந்தகையில் பண்டைய காலத்தில் மூன்று விதங்களில் இறந்தவர்களை புதைப்பது கண்டறியப்பட்டுள்ளது. பராமரிக்க முடியாத முதியவர்களை உயிருடன் உணவு, தண்ணீர் வைத்து மிகப்பெரிய தாழியினுள் வைத்து அப்படியே புதைப்பது,          இறந்தவர்களை அவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களுடன் புதைப்பது, வேறு இடத்தில் இறந்தவர்களை எடுத்து வந்து தாழியினுள் வைத்து புதைப்பது என மூன்று நிலைகள் கண்டறியப்பட்டன. இந்த மூன்று நிலை தாழிகளும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அடி உயரம் முதல் ஐந்தரை அடி உயரம் வரை உள்ள தாழிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நான்கு மாடங்களுடன் கூடிய நீர் நிரம்பிய தெப்பக்குளம் அழகு சேர்கிறது. நேற்று மாலை 6:15மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கீழடிக்கு வந்திருந்தார். வழி நெடுகிலும் வாழை மர தோரணங்கள் வைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் சுற்றிப்பார்த்தார். விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், சக்கரபாணி, தங்கம் தென்னரசு, நேரு, எ.வ .வேலு, பெரிய கருப்பன், தியாகராஜன், மூர்த்தி, மகேஷ், ராஜ கண்ணப்பன், எம்.பி.,க்கள் வெங்கடேசன், கார்த்தி, மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த, எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி, ராமநாதபுரம் காதர்பாட்சா, முத்துராமலிங்கம், தளபதி, தலைமை செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரன், செய்தித்துறை இயக்குனர் மோகன், டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூடுதல் டி.ஜி.பி.சங்கர், மதுரை ஐ.ஜி. அஸ்ராகர்க், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, எஸ்.பி செல்வராஜ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கடும் கெடுபிடி உதித்தால் கீழடி அருங்காட்சியகம் திறப்பை, பத்திரிக்கையாளர்கள் போட்டோ, வீடியோ எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

கீழடியில் முதற்கட்ட ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வந்த காரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே கீழடிக்கு சென்றார். தமிழர்களின் தாய்மடியான கீழடியை முதன் முதலில் உலகறிய செய்த ஆராய்ச்சியாளரை அவமதித்தது தொல்லியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Media: Dinamalar